மாணவப் பருவம் ஓர் இளமைப் பருவம்! இளமைப் பருவம் என்பது எப்போதும் ஒரு கலவரப் பருவம்! அதைக் கலவரப்படுத்தி, தன் கைவசப்படுத்துவதற்காகப் பல்வேறு தீமைகள் படையெடுத்து வந்து காத்துக் கொண்டிருக்கின்றன.
அந்தத் தீமைகளில் தலையாயது காதல் என்ற பெயரில் உள்ள காமம்! அடுத்து போதை, சூதாட்டம் என தீமைகளின் பட்டியல் நீள்கின்றது. குறைந்தபட்சத் தீமை புகைப் பழக்கமாவது ஒரு மாணவனை ஆட்கொள்ளாமல் விடுவதில்லை. சுற்றிலும் தீமைகளின் தீ நாக்குகளைக் கொண்ட ஒரு வளையத்தின் மத்தியிலும் பற்றி எரியாமல் இருக்கும் ஒரு சூடத்தைப் போன்று அவற்றிலிருந்து தப்புகின்ற, மதி மயங்காத மாணவர்களும் இருக்கின்றார்கள்.
பளிங்கு போன்ற தெளிந்த உள்ளத்தைக் கொண்ட இத்தகைய மாணவர்களிடம் தான் பல இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் பார்வைகளைத் திருப்புகின்றனர். தங்கள் கருத்துக்களை அவர்களிடம் பதிய வைக்கின்றனர். அலை மோதிய பல்வேறு பயங்கரத் தீமைகளிலிருந்து தப்பிய மாணவர்கள் இந்த இயக்கங்களிடம் மதி மயங்கி விடுகின்றனர். தடம் மாறி விடுகின்றனர். அந்த இயக்கங்களில் ஒன்று தப்லீக் ஜமாஅத்! இது ஒரு வழிகெட்ட இயக்கம் என்பதற்கு வானளாவிய ஆதாரம் தேவையில்லை. இவர்கள் தொழுகைக்குப் பின்னர் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்து தஃலீம் தொகுப்பு என்ற புத்தகத்தைப் படிப்பார்கள். அப்போது அவர்களிடம், குர்ஆன் தர்ஜுமாவைப் படியுங்கள் என்று சொன்னால் போதும். அவர்களுடைய முகம் அல்லாஹ் சொல்வது போன்று மாறி விடும்.இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல்குர்ஆன் 74:49-51)
கண்ட கண்ட குப்பைகளைப் படிக்கும் இவர்களிடம், கண்ணியமிக்க குர்ஆனைப் படியுங்கள் என்று சொன்னால் கோபக் கனல் வீசுகின்றது. இவர்கள் வழிகெட்ட இயக்கம் என்பதற்கு இது சிறந்த ஒரு அடையாளம். இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் படிப்பு, குடும்பம், வேலை அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு மனம் போன போக்கில் அலைகின்றனர்.
அடுத்து, ஜமாஅத்தே இஸ்லாமி சிந்தனையைப் பின்னணியாகக் கொண்ட இயக்கங்கள். இந்த இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயகத்தை ஷிர்க் என்று சுற்றி வளைத்துக் கொண்டு நிலை நிறுத்துவார்கள். ஆனால் திருக்குர்ஆனும் ஹதீசும் நேரடியாகவே கண்டிக்கின்ற இணை வைப்பை, ஷிர்க்கை, சமாதி வழிபாட்டை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். இதிலிருந்தே இவர்களது வழிகேட்டைப் புரிந்து கொள்ளலாம். மேலும் இவர்களின் அழைப்புப் பணி, நட்சத்திர விடுதி அழைப்புப் பணியாகும். நாற்சந்தி, நடுவீதி அழைப்புப் பணி அல்ல!
இந்த இயக்கங்களின் வார்ப்பாக வந்த எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் போன்ற இயக்கங்கள் கடைந்தெடுத்த வழிகேட்டில் இருக்கின்றன. துவக்கத்தில் ஜனநாயகம் ஷிர்க், ஜிஹாத், இஸ்லாமிய ஆட்சி என்று புரட்சிகரமாகப் பேசி புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் தலை கீழாக மாறி, தறி கெட்டுப் போய், தேசத்தைப் பொதுவாக்குவோம்; அரசியலை நமதாக்குவோம் என்று வெற்றுக் கூச்சல் போடுகின்றனர்.
தமுமுகவாவது தேர்தல் களத்திற்கு வந்த பிறகு தான் சாமியாருக்கு ருகூவு செய்தார்கள். ஆனால் இவர்கள் தேர்தல் களத்திற்கு வருவதற்கு முன்பே அரசியல் ஆதாயத்திற்காக சாமியார்களுக்கு ஸஜ்தா செய்வார்கள் போல் தெரிகிறது. பொங்கல் வாழ்த்து, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து, கிறிஸ்துமஸ் வாழ்த்து என்று தேர்தல் களத்தில் குதிப்பதற்கு முன்பே தங்களை வழிகெட்ட அமைப்பினர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.இன்றைய கல்லூரி மாணவர்களில் சிலர் இவர்கள் விரிக்கும் மாய வலைகளில் விழுந்து விடுகின்றனர். இந்த இயக்கத்தினர் சமுதாயம், ஜிஹாத், ஆட்சி அதிகாரம் (இஸ்லாமிய ஆட்சி அல்ல) போன்ற பசப்பு வார்த்தைகளில் தங்கள் பாசறைக்கு மாணவர்களிடம் தான் அதிகம் தூண்டில் போடுகின்றனர். இவர்களது தூண்டிலில் தொங்கும் மண் புழுவை நம்பி இம்மை, மறுமையை இழந்து விடக் கூடாது என்று மாணவர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இவர்களது வலையில் சிக்கிய மாணவர்கள் தங்கள் கல்வியை இழந்து தேர்வுக்குக் கூட சரியாகப் படிக்காமல் கண்ட கண்ட போஸ்டர்களை ஒட்டிக் கொண்டு திரிந்து தேர்வில் தோல்வியடைகிறார்கள்; தங்கள் எதிர்காலத்தை இருண்ட பாலைவனமாக ஆக்குகின்றனர்.
நாம் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுவாக இளைஞர்கள் அனைவரையும் கேட்டு கொள்வது ஒன்றே ஒன்று தான். இந்த இயக்கம் மட்டுமல்ல! தவ்ஹீத் ஜமாஅத் உட்பட எந்த இயக்கமாக இருந்தாலும் கண்டதும் காதல் என்பது போல் இல்லாமல் ஆய்வு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும்,குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்வது போன்று அசை போட்டு, ஆய்வு செய்து பின்பற்றுங்கள்; சிந்தித்து செயல்படுங்கள். இம்மையில் மாற்றம் காணுங்கள்; மறுமையில் ஏற்றம் காணுங்கள்.
நன்றி:ஆன்லைன் பீ .ஜே.காம்
0 comments:
Post a Comment