ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஜூலை 3ல் புதுக்கோட்டை மாவட்ட- தவ்ஹீத் எழுச்சி மாநாடு

Written By GM.BASHA on Thursday, May 5, 2011 | 10:43 PM


மனிதன் ஒரு சமூகப் பிராணி!  அவனால் ஒரு போதும் தனித்து வாழ இயலாது.  தாய் தந்தையர், அண்ணன் தம்பி, அக்கா தங்கை, மனைவி மக்கள் என்ற குடும்ப இணைப்பு!  இதே குடும்ப இணைப்பைக் கொண்டு அவனது அக்கம் பக்கத்தில் அடுத்தடுத்து வாழும் அண்டை வீடுகள்!  இவை அத்தனையுமாகச் சேர்ந்து அமையப் பெற்ற வீதிகள்!  பல்வேறு வீதிகளைக் கொண்டு அமைந்திருக்கும் ஊர்கள்! ஆகிய இந்த மூன்றடுக்கு சமூகக் கட்டமைப்பில் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடு ஒன்றாக ஒன்றிப் போனவன் மனிதன்!

இத்தகைய சமூகக் கூட்டமைப்பை விட்டு, அடுக்கடுக்கான கட்டமைப்புகளை விட்டு ஒரு மனிதன் வெளியேறுவது என்பது ஒரு நீர்வாழ் பிராணி நீரை விட்டு வெளியேறுவது போலத் தான். அதனால் தான் சமூகத்தில் மலிந்து  கிடக்கும் தீமைகளை எதிர்த்து நிற்க, அதன் சக உறுப்பினனாகிய ஒருவன் தயங்குகின்றான். அந்தத் தீமைகளில் இவனும் சேர்ந்து சங்கமமாகி விடுகின்றான்.

தன்னை எதிர்த்து, தனது மூடப் பழக்கங்களை எதிர்த்து ஒரு புரட்சியாளன் புறப்பட்டு விட்டால் அவனைப் புதை குழிக்கு அனுப்புவதற்குக் கூட இந்தச் சமூகம் தயங்குவது கிடையாது. இது அந்தச் சமூகம் எடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையாகும். அதன் முதற்கட்ட நடவடிக்கை ஊர் நீக்கமும் ஒதுக்கித் தள்ளுவதும் தான்.
"அல்லாஹ் ஒருவன்! அவன் ஏகன்'' என்ற கொள்கையை இறைத் தூதர்கள் முன் வைத்த மாத்திரத்தில் ஆத்திரம் கொண்ட இந்தச் சமூகம் அப்படித் தான் அவர்களைத் தனிமைப்படுத்தியது. அத்துடன் நின்று விடாமல், "புதுக் கருத்தைச் சொல்லும் இவர் ஒரு பைத்தியக்காரர்; மதிகளை மயக்கும் மந்திரக்காரர்; பிரிவினையை ஏற்படுத்தும் மாயக்காரர்'' என்ற பட்டங்களைச் சூட்டி, அந்த இறைத் தூதர்களைப் பழித்து பரிகசித்து நின்றது. அதை அந்த இறைத் தூதர்கள் எதிர்த்து நின்றார்கள். இது குர்ஆன் தரும் பாடம்!
சமூகச் சீர்திருத்தங்களில் ஈடுபடுகின்ற எந்த ஒரு சீர்திருத்தவாதியும் இது போன்ற சோதனையான கட்டங்களைச் சந்திக்காமல் இருக்க முடியாது.  அவரை அந்தச் சமூகம் தலைகீழாகப் புரட்டாமல் இருப்பதில்லை. இங்கு தான் இறைத் தூதர்களின் வாழ்க்கை நமக்கு ஓர் ஆறுதலாக வந்து நிற்கின்றது. அவர்களின் வரலாறு சமூக சீர்திருத்தக் கொள்கையின் போராட்டப் பாதையில் ஒளி விடும் சுடராகவும், தளர்ந்து போகும் உள்ளங்களுக்கு சத்தாகவும் சாறாகவும் அமைகின்றது.


இதற்கு எடுத்துக்காட்டைக் காண்பதற்கு வரலாற்றுப் பாதைகளில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதில்லை. நாம் அண்மையில் கடந்து வந்த 1980ஆம் ஆண்டின் பிற்பகுதிகளை சற்றுத் திரும்பிப் பார்த்தாலே போதும்.  தமிழகம் ஏகத்துவக் கொள்கை என்னும் தண்டவாளத்தை விட்டுத் தடம் புரண்டு, இருட்டிலே தட்டழிந்து கொண்டிருந்தது. நாமும் அந்த இருட்டையே வெளிச்சம் என்று நம்பிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தான் ஏகத்துவ வெளிச்சம் நம் மீது பாய்ந்தது. நமது சிந்தனைக் கதவுகள் திறந்தன. அசத்திய இருளிலிருந்து வெளியேறினோம். அடுத்தவருக்கும் அதை எடுத்துச் சொன்னோம்.


ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னதும் அடி, உதை, அரிவாள் வெட்டு, ஊர் நீக்கம் போன்ற சோதனைகளுக்கு உள்ளாக்கப் பட்டோம்; இன்னும் உள்ளாக்கப் படுகின்றோம்; இந்த ஊர் நீக்கப் படலம் இன்றும் தொடர்கின்றது. இதற்கு பொட்டல்புதூரை எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். ஒரு சகோதரர் அங்கு ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ததற்காக ஊர் நீக்கம் செய்யப்பட்டார். இவரிடத்தில் யாராவது பேசினால் அவரும் ஊர் நீக்கம் செய்யப்படுவார். இவருக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது, எந்தத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் ஒரு குஞ்சு கூட பேசுவது கிடையாது.அதுபோன்று நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் வடக்கு அம்மாபட்டினம்,ஆர்.புதுப்பட்டினம் தவ்ஹீத் சகோதர்களின் மீது நடத்தப்பட்டகொலைவெறித்தாக்குதல்களைச்சொல்லலாம்.
உதாரனத்திற்குத்தான் இவை ஆனால் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.  


இப்படி தனித்து ஒதுக்கப்பட்டு அதனால் சஞ்சலப்பட்டு அல்லலுறும் அன்புச் சகோதரர்களுக்கு ஆறுதல் வழங்குவது நம் மீது கடமையாகும்.  தவித்த வாய்க்குத் தண்ணீர் தரப்படக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு அதைத் தாங்கி நிற்கும் இனிய இஸ்லாமிய நெஞ்சங்களே! ஏகத்துவவாதிகளே! இப்ராஹீம் (அலை) அவர்களின் வாரிசுகளே! என்று கரிசனத்துடன், கனிவான உள்ளத்துடன் அழைத்து அவர்களையும் ஏனைய ஏகத்துவவாதிகளையும் ஓரிடத்தில் சங்கமிக்கச் செய்ய வேண்டும். அப்படியொரு சந்திப்பு முகாம் இத்தகைய நேரத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.


உங்களை உங்கள் சமூகம் எட்டி எறிகின்றதா? இதோ உங்களைக் கட்டி அணைத்து, தோளோடு தோள் கொடுத்து உதவ ஏகத்துவ சமூகமாகிய நாங்கள் உள்ளோம் என்று காட்டும் ஓர் ஒன்று கூடல் நிகழ்ச்சி அவசியம் நடந்தேறியாக வேண்டும். அது தான் இன்ஷா அல்லாஹ் ஜூலை 3 தேதி புதுக்கோட்டையில்  நடைபெறவிருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாடு!


இந்த மாநாடு இது வரை தத்தமது ஊர்களில் தனிமைப் படுத்தப்பட்டு, காயப்பட்டுக் கிடக்கும் சத்திய சகோதரர்களுக்கு ஓர் ஒற்றடம்!  பாதிக்கப்பட்ட ஏகத்துவ மக்களின் பாசமிகு சங்கமம்!  கொதிப்படைந்த சத்திய மக்களுக்கு குளிர் தரும் மேகம்!


வன்முகம் கொண்டு சமூகப் பகிஷ்காரம் செய்யப்பட்ட அம்மக்கள் இங்கே இன்முகங்களோடு சமூகப் பாச அரவணைப்புடன் வரவேற்கப்படும் போது "இதுவரை நம்மைத் தனிமரம் என்றல்லவா எண்ணி தப்புக் கணக்குப் போட்டு விட்டோம். நிச்சயமாக இந்த ஏகத்துவத் தோப்பில் சஞ்சரிக்கும் இலட்சக் கணக்கான கனி மரங்களில் நாமும் ஒன்று'' என்று எண்ணி சந்தோஷமடைவார்கள். இந்த உறவு மேலும் மேலும் இந்தக் கொள்கையைப் பரப்புவதற்குத் தூண்டுகோலாக அமையும்.


இப்போதெல்லாம் ஏகத்துவக் கொள்கையல்லாத பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என எவற்றிற்கும் ஆட்கள் கூடுவதில்லை. அதே சமயம் ஏகத்துவப் பொதுக் கூட்டங்கள், மாநாடு எனும் போது மக்கள் தேனீக்களாய் மொய்க்கின்றனர். ஏகத்துவத்தை ஏற்காத ஒருவர் இந்த மாநாட்டுப் பந்தலில் களம் புகுவாரானால் நிச்சயமாக அவர் ஏகத்துவத்திற்கு ஒரு புது வரவாகி விடுவார்.


"அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)நூல்: புகாரி 3009


இந்த ஹதீசுக்கொப்ப நாம் ஒரு கோடி ரூபாய் செலவளித்தாலும் அவை நமக்கு மறுமையில் நன்மையைப் பெற்றுத் தரும் கருவூலக் களஞ்சியங்களாக வந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை!  
எனவே இம்மாநாட்டுக்குக் குடும்பத்துடன் வருவதற்கு இன்றே ஆயத்தமாவீர்!  மாநாட்டு ஏற்பாடுகளுக்கான நிதிகளை இப்போதே அனுப்பத் தொடங்குவீர்!  புதுக்கோட்டை மாவட்ட ஏகத்துவ வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுத இப்போதே தயாராவீர்!
அதற்கு முன்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இம்மாநாடு எல்லா வகையிலும் வெற்றி பெற இரு கரமேந்தி இறைஞ்சிடுவீர்!





1 comments:

Unknown said...

Assalamu alaikum,

Good article. Sinthikum makkalukku nitchayamaaga ithil padipinai errukirathu.

by

Hakeem.

Post a Comment