ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து - பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்

Written By GM.BASHA on Tuesday, November 27, 2012 | 2:53 AM

மும்பை: மறைந்த பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காவும் இரு இளம் பெண்களைக் கைது செய்த மகாராஷ்டிர காவல்துறையினர் மீது மும்பை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சிவசேனா கட்சியினரை ஜஸ்ட் 7500 ஜாமீனில் வெளியே விட உத்தரவிட்ட மாவட்ட நீதிபதியையும் தூக்கியடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பால் தாக்கரே மரணமடைந்தார். இதையடுத்து மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போனது. சிவசேனா கட்சியினரின் வன்முறைக்குப் பயந்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த 21 வயதான ஷாஹின் தத்தா என்பவர் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவரது தோழியான ரேனு என்பவர் லைக் கொடுத்திருந்தார்.
இதனால் சிவசேனா கட்சியினர் கடும் ஆத்திரமடைந்தனர். ஷாஹீனின் உறவினர்களுக்குச் சொந்தமான மருத்துவமனையை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதனால் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் மதிப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர போலீஸார் சிவசேனாக் கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். அதாவது ஷாஹீனையும், ரேனுவையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது மத நம்பிக்கையைப் புண்படுத்துதல், இரு தரப்புக்கு இடையே விரோதத்தை வளர்த்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கையும் போட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் கோர்ட்டிலும் நிறுத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர அரசும், போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கிளினிக்கைத் தாக்கிய 10 சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவர்களை பால்கர் மாஜிஸ்திரேட் வெறும் ரூ. 7500 ரொக்க ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இது மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தானே எஸ்.பி. ரவீந்திர செங்கோகர், பால்கர் காவல் நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிங்க்ளே ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. அதன்படி இருவரையும் மகாராஷ்டிர மாநில டிஜிபி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் 10 சிவசேனா குற்றவாளிகளை சொற்ப ரொக்க ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பால்கர் மாஜிஸ்திரேட், ராமச்சந்திர பகடேவையும் ஜல்கோன் கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
முன்னதாக, கொங்கன் சரக ஐஜி சுக்வீந்தர் சிங் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கையில், இரு இளம் பெண்கள் மீதான காவல்துறை நடவடிக்கை தவறானது. அவர்கள் மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகளும் பொருத்தமற்றவை என்று கூறியிருந்தார். மேலும், இரு பெண்கள் மீதும் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி:தட்ஸ்தமிழ் 

0 comments:

Post a Comment